வாஜபேய யாகனாகிய நான்….

வாஜபேய யாகனாகிய நான்….

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அந்தக் கப்பல் பினாங்கை நோக்கி புறப்படத் தொடங்கியிருந்தது.. கடுமையான காயங்களோடு இருந்த பெரும்பாலானோருக்கு விழுப்புண் தந்த வலியைவிட மனப்புண் தந்த வலி சித்திரவதை செய்தது. போரில் இறக்காமல் இப்படி நாடு கடத்தப்பட்ட அரசியல் கைதிகள் ஆகிவிட்டோமே என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே எண்ணி நொந்தனர். கப்பலின் மேலடுக்கு கைதியாக இருந்த நான் இதையெல்லாம் பார்க்கச் சகிக்காமல் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தேன், கப்பல் அலைகடலின் நடுவே கிழித்துக் கொண்டு முன்னேறிச் செல்லும் போது, என் நினைவுகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன…

சக்கந்தியின் பாளையக்காரர்கள் பரம்பரையில் மூத்தவனாக வந்து, வேலுநாச்சியாரின் மருமகன் ஆன நாளில் இருந்து, எனது மாமனாரின் பள்ளிப்படை ஆலயத்திற்கு தான தர்மங்களைத் துவங்கி எத்தனையோ ஆலயங்களுக்கும், அன்னச் சத்திரங்களுக்கும், தனி நபர்களுக்கும், குடிமக்களுக்கும் அள்ளித் தந்த இந்த கரங்களில் ‌இப்போது கனமான இரும்புச் சங்கிலிகள், .

காளையார் கோயில் காட்டில் மறைவிட முகாம் அமைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது சுற்றி வளைத்த பரங்கியர் கூட்டத்தின் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு, ஆங்கிலேய நாடக நீதிமன்றத்தில் பெயரளவில் விசாரணை செய்யப்பட்டு, இதோ இப்போது நடுக்கடலில் சென்று கொண்டிருக்கிறேன்..

இங்கே காயம் தந்த வலி- மனவேதனையுடன் உள்ளக் குமுறலில் துடிக்கும் 71 அரசியல் கைதிகளும் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள். அவர்கள் இப்போது அவர்களுக்காக வருந்தவில்லை!.. அநாதைகள் ஆகிவிட்ட அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை நினைத்தே தற்போது கலங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். இதில் நானும் விதிவிலக்கல்ல!.. குடிமக்களின் துயரை நேரடியாக ஒரு மன்னன் காண்பது அந்தத் துயரிலும் மேலும் துயரமானது. இதோ இந்தக் கரங்களால் அதைத் துடைக்க முடியாதவாறு காப்பு இடப்பட்டுள்ளது. காப்பாற்ற இயலாத இந்தக் கரங்களுக்கு காப்பு எனும் அடிமைச் சங்கிலி சரியான தண்டனைதான்.

இதோ என்னோடு பிணைக்கப்பட்ட ராமநாதபுரம் ஜெகநாத ஐயன் தனது கை கால்களை அசைக்கக்கூடத் திராணியற்றவனாக இருக்கிறான். பாவம் அவன் உடம்பில் சவுக்கு இறங்காத இடம் பாக்கியில்லை!. பிறப்பால் அந்தணனாக இருந்தாலும் நெஞ்சளவில் மறவனாக இருக்கிறான். இத்தனை அடிகள் வாங்கியும் இன்னும் ஒரு முணுமுணுப்பு அவனிடமிருந்து எழவில்லை! என்பது ஆச்சரியமான விஷயம். எங்கள் 72 பேரையும் இரண்டிரண்டு நபர்களாகப் பிணைத்து, 36 பேர்களாக ஆங்கிலேயர்கள் மாற்றி இருந்தனர். இதற்கு காரணம் இரும்புச் சங்கிலியின் பற்றாக்குறை அல்ல!.. இருவராலும் இணைந்து ஓட முடியாது என்பதால் இருக்கும் என்று எண்ணுகிறேன். அதுவும் நான் இப்படி முரட்டு அடி வாங்கி பாதம் ஊன்ற முடியாமல் வீங்கிக் கிடக்கும் இந்த பார்ப்பனனை இழுத்துக் கொண்டு எப்படி ஓடுவது…

வங்கக் கடல் சூரியனை மெதுவாக உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. மெதுவாக என் மீது பனிக்காற்று உரசத் துவங்கியிருந்தது… எனது கண்கள் அந்த ரவியின் ரத்தச் சிவப்பைக் கண்டபடியிருக்கிறது… மனமோ அதில் லயிக்காமல் என்னை மீண்டும் மீண்டும் பின்னுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. நான் நினைத்துப் பார்க்க இங்கு இன்னும் என்ன இருக்கிறது?..

…ஆம் நான்தான் சக்கந்தியின் வேங்கன் பெரிய உடையாத் தேவனாகிய அரசு நிலையிட்ட விஜயரகுநாத பெரிய உடையாத்தேவன்

தொடரும்….

May be an image of one or more people and text that says 'தேவர் சமுதாயத்தின் வரலாறு. வரலாற்றில் இன்று களரி வல்லப வேங்கை பெரிய உடையனதேவர் @”LLAMATHANO BILLA MATHANO KINGDON SEADE MALARAR இந்தியாவில் முதலில் நாடு கட த்தப்பட்ட மன்னர்.. இவரின் வரலாறு சாதித்திய அகரதமி விருது பெற்றது தாய் நாட்டின் வி ந்தலைக்காக தன்னுயிர் நீத்த சீர்மிகு சின்ன மறவர்நாடு சிவகங்கை சமஸ்தானம் மன்னர் வோ ங்கை பெரிய உடை யாத்தேவர் 1793-1801 மற்றும் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமிதேவர் உட்பட 73 வி டுதலை போராட்ட தியாகிகளை வெள்ளையர்கள் பினாங்கு நாட்டிற்க்கு நாடு கட த்திய சோக தினம் இன்று'

வாஜபேய யாகனாகிய நான்…2.

நான் என்ன குற்றம் செய்தேன்?..

என்னைப் பொம்மையாக பாவித்து பிறர் அரசாங்கம் செய்ய உடந்தையாக இருந்தேனா?..

என் மனைவியும் மக்களும் என்ன குற்றம் செய்தனர்?

வங்கக் கடலின் அலைகள் இவ்வளவு ஆக்ரோஷமாக இந்தக் கப்பலின் மீது மோதுகிறதே.. இதுபோல் இன்னும் பலமடங்கு வேகமெடுத்து இவைகள் அந்தப் பரங்கியர் பூமியை மூழ்கடிக்கக் கூடாதா?

இந்த நவாப் போல ஒரு கேடு கெட்டவன் இந்த உலகத்தில் வேறு எவனும் இருக்க முடியுமா? ச்சீ ச்சீ.. என்ன பிழைப்பு இதெல்லாம்.. அவன் தன் மானம், உடல், எல்லாவற்றையும் கேவலம் பணத்துக்காக பரங்கியிடம் போய் அடமானம் வைத்து விட்டான். அவன் என் சின்ன மாமன் சொன்னது போல மறைவிட மயிருக்குச் சமமானவன்தான்.

.. நான் ஏன் இவ்வளவு கொந்தளித்துக் கொண்டிருக்கிறேன்.. ? என்னவாயிற்று எனக்கு.‌ .?. எப்பேர்ப்பட்ட துன்பங்களையும் தாக்குப்பிடிக்காதவன் எப்படி ஒரு நெஞ்சுரம் கொண்ட ஆண்மகனாக இருக்க முடியும்?

– திடீரென‌ முதுகின் பின்புறத்தில் இருந்து ஒரு அசைவு, ஜெகநாத ஐயன் அரை மயக்க நிலையில் இருந்து இப்போது தெளிந்து கொண்டிருந்தான்.. ஒரு ப்ராஹ்மணன் கடல் தாண்டக் கூடாது என்பது அவனின் தர்மம். ஆனால் என்ன செய்ய,.. இவனின் விதி இப்போது மிலேச்சனின் கையில் அல்லவா இருக்கிறது!.

கப்பலின் கீழ்தளத்தில் சிலர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர். பாவம்,.. திருமயம் கோட்டையில் நாங்கள் சிறையில் இருந்தபோதே பலருக்கு மனநலம் மட்டுமல்ல, உடல் நலமும் கெட்டிருந்தது. அங்கு எங்களுக்கு சரியான குடிநீர் கூட தரவில்லை!. மற்றவர்களுக்கு எப்படியோ,. நான் சேரலாதன் இரும்பொறை போல மானத்தையே போர்த்திக் கொண்டு எதுவுமே வேண்டும் என்று கேட்டு வாங்கிடக் கூடாது என்பதில் திண்ணமாக இருக்க முடிவு செய்து கொண்டேன்.

ஜெகநாதன் இப்போது கண் விழித்து விட்டான்.‌ மங்கிய நிலவொளியில் எனது முகத்தை சில விநாடிகள் உற்றுப் பார்க்கிறான்… அவனது உதடுகள் மெதுவாக விரிந்து ஏதோ சொல்கின்றன.. நான் என்ன சொல்கிறான்?.. என்று யோசிக்கும் நேரத்தில் மீண்டும் அந்த காய்ந்து போன உதடுகளில் :மயிலப்பன்’ பேரை உச்சரித்தான்..‌ மயில்.. மயிலப்பன்…‌ ஆமாம்.. அவன்தான் சித்திரங்குடி சேர்வைக்காரன் மயிலப்பன்..

அவனுக்கு என்ன?.. அவன் நலமாகத்தான் இருப்பான். அவனை இந்த பரங்கிகளால் அவ்வளவு சுலபமாகப் பிடித்து விட முடியாது!. இப்போதும் எங்கேயோ ஏதாவது ஒரு சாமியார் வேஷத்தில் எந்த மடத்திலாவது இந்த வெள்ளைப் பன்றிகளுக்கெதிராக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பான். ஆனால்.. நாங்கள் நடத்திய கடைசிப் போரில் வந்து கலந்து கொள்ள அவனுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவன் தயாராக மறவ மங்கலத்தின் மேடான பகுதியில் நின்று கொண்டு, எங்களின் செங்காவி நிறத்தில் ஒரு புறம் மீனும் மறுபுறம் கருடனும் கொண்டு பறக்கும் கொடியை காளையார் கோயில் கோபுரத்தின் மீது ஏற்றியவுடன் தான் சேர்த்திருந்த படையுடன் புறப்படத் தயாராக இருந்தான். ஆனால் கொடியே ஏற வழியில்லை எனும்போது அவன் என்ன செய்ய முடியும்?. அந்தக் கொடியை ஏற்ற எத்தனிக்கும் போதுதான் வாணத்தேவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் சத்தமே இல்லாமல் கீழுள்ள கற்தரையில் விழுந்து சிதறியதை பார்த்தவர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள். மயிலப்பன் நான் அடிக்கடி தான தர்மம் செய்த சூடியூர் மடத்தில்தான் வேத சந்நியாசி போல வேஷம் போட்டுக் கொண்டு வேத விளக்கங்களை சொற்பொழிவாற்றிக் கொண்டும், பௌணிகரன் போல பிதற்றிக் கொண்டும் இந்த பரங்கிகளை ஏமாற்றிக் கொண்டு அங்கே தங்கியிருந்தான். இப்போது அவன் எங்கே இருப்பானோ தெரியவில்லை!.. அவன் புத்திமான் இவர்களிடம் லேசில் பிடிபட்டு விட மாட்டான். இந்த ராஜசிங்க மங்கலம் ஜெகநாதன் அவன் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவன் அதனால்தான் மயக்கம் தெளிந்ததும் அவன் பெயரைச் சொல்கிறான்..

என்ன ஜெகநாதா.. இப்பவும் உனக்கு மயிலப்பனைத் தேடுகிறதோ?.. அவனாவது நல்லாயிருக்கட்டும் என்றேன்.

ஜெகநாதன் சிறிது சப்தமாக நான் மயிலப்பனைப் பார்த்தேன்.. என்றான். நான் சட்டென அவன் வாயைப் பொத்தினேன்.

நம்மைச் சுற்றி இருபது பேர், நாம் ஆயுத முனையில் கடுங்காவலில் இருப்பதை மறந்து விடாதே ஜெகநாதா.. மயிலப்பன் இருக்கும் இடம் தெரியாமல்தான் இவர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். நீயே ஏதாவது பேசி அவனை இவர்கள் நெருங்கிட வைத்திடாதே என்று அவன் காதோரம் மெல்லிய குரலில் சொன்னேன்…

ஜெகநாதன் சுற்றிலும் கண்ணைச் சுழல விட்டான். மெதுவாக ஏதோ கூற விரும்பினான். நான் வேண்டாம் என்பதை கண்ணசைவில் தெரிவித்தேன். ஜெகநாதன் என் மடியில் படுத்தவாறே மௌனியானான்.

ஜெகநாதன் என்ன சொல்ல வருகிறான்… நான் குழம்பினேன். அது எதுவாக இருந்தாலும் இந்த சமயம் அதற்கு ஏற்ற நேரமல்ல!.. இவர்கள் உணவருந்தவோ அல்லது வேறு காரணங்களிலோ கீழே செல்லும் நேரத்தில் கேட்கலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்று முடிவு செய்தேன்.

அதே நேரம் கீழே ஒரு அலறல் சத்தத்தை கேட்க நேர்ந்தது…. அது பொம்மைய நாயக்கனின் குரல். அவன்தான் வாராப்பூர் பாளையக்காரனான பொம்மைய நாயக்கன்.. அவனுக்கு என்ன நடக்கிறது?…..

தொடரும்..

May be a cartoon

All reactions:

நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் ” வாஜபேய யாகன் ஆகிய நான்” எனும் உண்மைச் சரித்திரத் தொடர் யாருடைய நாவல் தழுவலும் அல்ல!.. என்பதையும், இது முழுக்க முழுக்க நான் இதுவரை வாசித்த – அறிந்த தரவுகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் என்னால் சொந்தமாக எழுதப்பட்டு வருகிறது என்பதையும் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவை பல மூலத் தரவுகளில் இருந்து திரட்டப்பட்டு வேங்கன் பெரிய உடையணத் தேவர் சொல்வது போல என்னால் புதிதாகப் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சரித்திரச் சித்திரம் என்பதையும் அறிவிக்கிறேன். நன்றி!

இதை வாசிக்கும் அறிஞர் பெருமக்கள் குறையைச் சுட்டி, நிறையைத் தருமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

Author: Muniraj Vanathirayar K.S

ஆய்வாளரின் பயணங்கள் முடியலாம்? ஆய்வுகளின் பயணங்கள் முடிவதில்லை! இறைவனுக்கு ஈந்த வள்ளல் மாவலி சக்கரவர்த்தி வழியில் தோன்றியவன்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started